Followers

Sunday, August 17, 2014

ஆன்மீக அனுபவங்கள் பகுதி 171


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொருவருக்கும் கஷ்டங்கள் வந்துக்கொண்டு தான் இருக்கும். அதனை எதிர்த்து போராடி வெற்றி பெறவேண்டும். நாம் நமக்காக தான் போராடிக்கொண்டிருக்கிறோம் என்று மனதில் நினைத்துக்கொண்டு போராடவேண்டும். 

நான் கஷ்டப்பட்ட காலத்தில் என் மனதில் நான் இப்படி நினைத்துக்கொண்டிருப்பேன். அதாவது நமது வாழ்க்கைக்கு தான் போராடுகிறோம் நாட்டிற்க்காக போராடவில்லை எனறு நினைப்பேன்.

பொதுவாக நாம் கஷ்டம் இருக்கிறது என்று நமது பிரச்சினையை கடவுளிடம் சொன்னால் கடவுள் மேலும் மேலும் பிரச்சினையை தான் தருவார். நான் மகிழ்வோடு இருக்கிறேன் என்று சொன்னால் கடவுள் நமக்கு மகிழ்ச்சியை தருவார். திரும்ப திரும்ப பிரச்சினையை மட்டும் சொன்னால் பிரச்சினையே வாழ்க்கையாகிவிடும்.

எனக்கு ஒரு பண நெருக்கடி சமீபத்தில் ஏற்பட்டது அந்த நேரத்தில் நான் நிறைய நண்பர்களிடம் பணத்தை கடனாக கேட்டேன். அப்பொழுது நான் நம்பி கேட்ட இடங்கள் எல்லாம் கைவிரிப்பை மட்டும் காட்டினார்கள். எதிர்பார்க்காமல் பல நண்பர்கள் உதவுகிறேன் என்று முன் வந்தார்கள். இந்த பிரச்சினையில் நான் கற்றுக்கொண்ட பாடம் ஒவ்வொருவரையும் நான் புரிந்துக்கொண்ட விதத்தில் தவறு செய்து இருக்கிறேன் என்று தெரிகிறது. இறைவன் இந்த புரிதல் தவறு என்பதை காட்டுவதற்க்கு இப்படிப்பட்ட பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறார் என்று நினைத்தேன். 

நமக்கு பிரச்சினை வருவது நல்லது என்று நினையுங்கள். அதில் இருந்து ஒரு விசயத்தை நாம் கற்றுக்கொள்ளலாம். அந்த பிரச்சினையை சமாளிப்பதில் தான் நமது சக்தி என்ன என்று தெரிகிறது.

பிரச்சினையில் பணநெருக்கடி என்பது ஒரு அற்புதமான பிரச்சினை என்றே சொல்லுவேன். பல பேரின் முகம் அந்த நேரத்தில் நமக்கு கடவுள் காட்டிக்கொடுக்கிறார் என்று புரியும். தெரியாத முகம் எல்லாம் நமக்கு தெரிய ஆரம்பிக்கும்.

நமது நண்பர்கள் கூட என்னிடம் பணம் கடனாக கேட்பார்கள் அந்த நேரத்தில் என்னிடம் இருந்தால் கொடுத்து உதவுவது எனது பழக்கம். என்னிடம் இல்லை என்றால் என்னிடம் இப்பொழுது இல்லை வந்தால் உங்களை கூப்பிட்டு தருகிறேன் என்று சொல்லுவது உண்டு.

ஒரு நண்பர் நம்மிடம் கடன் கேட்கிறான் என்றால் அவன் நம்மோடு அதிக பற்றுதல் ஏற்படுத்திக்கிறான் என்று அர்த்தம். எதிர்பார்ப்பு இல்லாமல் நட்பு கிடையாது. 

இந்த உலகமே எதையாவது எதிர்பார்ப்போடு தான் இருக்கும். ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு தாய் பால்ஊட்டினால் மறு முறை அந்த தாயை பார்த்தவுடன் அந்த குழந்தை சிரிக்கும். ஏன் அந்த குழந்தை சிரிக்கிறது நமக்கு பால் கிடைக்கும் என்று தாயை பார்த்து சிரிக்கிறது. அங்கு தொடங்கிய எதிர்பார்ப்பு ஒவ்வொரு விசயத்திலும் மனிதனிடம் இருக்கும்.

தாயின் பாசத்திற்க்கே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்பொழுது மற்றவைகளுக்கு சொல்ல தேவையில்லை. ஒரு ஆன்மீகவாதியாக மாறவேண்டுமானால் முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். நாம் பிச்சை எடுக்க பிறந்து இருக்கிறோம் என்று புரிந்துக்கொள்ளுங்கள்.

தாயும் தந்தையும் மற்றும் இந்த பிரபஞ்சமும் சேர்ந்து நமக்கு பிச்சை போட்ட உடலை வைத்துக்கொண்டு ஒவ்வொரு விசயத்திற்க்கும் நாம் ஏதாவது ஒரு வழியில் பிச்சை எடுக்கிறோம் என்பதை நன்றாக புரிந்தால் அனைத்தும் சாத்தியமே. 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Pattavarthanamaana unmaikal.unmai konjam kasakkiradhu.